அறிந்துகொள்வோம்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் பண்டைத் தமிழ் எழுத்துக்களை மீட்கும் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டன. இம்முயற்சியில் ஈடுபட்டவர்களில் உ.வே. சாமிநாதையர் இன்றியமையாத இடத்தைப்பெறுகிறார். 1855-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்த அவர், பின்னாளில் தமிழர்களின் பண்டைய ஓலைச்சுவடிகளைத் தேடும் பணிகளில் முழு முயற்சிகளை மேற்கொண்டார். 90-க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சிட்டது மட்டுமின்றி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏட்டுச்சுவடிகளையும், கையெழுத்தேடுகளையும் சேகரித்து தமிழுக்குப் பெருந்தொண்டாற்றியதால், இவர் தமிழ் தாத்தா என அறியப்படுகிறார்.

ஆங்கில இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படும்  Geoffrey Chaucer,  14-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த எழுத்தாளர். இவர் 1343-ம் ஆண்டு பிறந்ததாக கருதப்படுகிறது. 1400-ம் ஆண்டு வரை வாழ்ந்த இவர் எழுதிய  The Canterbury Tales புத்தகம் தான் இவருக்கு பெரிய அளவில் புகழைப்பெற்றுத்தந்தது. இவர் பல்வேறு அரசுப் பணிகளிலும் பணியாற்றியதால் இவரது எழுத்துப் பணிகள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இவருடைய எழுத்துக்கள் முழுமையாக மீட்கப்படும் நிலையில் கிடைக்கவில்லை என்பதே உண்மை. எது எப்படியாகினும், ஆங்கிய இலக்கியம் 14-ம் நூற்றாண்டில் தான் தொடங்கியது என கருதுவதில் தவறேதும் இல்லை. ஆனால், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிவைத்த தமிழனின் எழுத்துக்கள் 20-ம் நூற்றாண்டில் மீட்கப்பட்டது தமிழனின் பெருமையே!
தமிழ் மொழி இலக்கணம் குறித்த நூல்களில் முதன்மையானதாகக் கருதப்படும் தொல்காப்பியம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாக கருதப்படுகிறது. இந்நூலை தொல்காப்பியர் எழுதியுள்ளார். சமற்கிருத மொழியில் எழுதப்பட்ட  அட்டாத்தியாயி நூலுக்கு முற்பட்ட காலத்தில் தொல்காப்பியம் எழுதப்பட்டிருக்கவேண்டும் என நம்பப்படுகிறது. மொழியியலில் தமிழர்கள் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே ஆழமான அறிவு பெற்றிருந்தது இதன் மூலம் அறியப்படுகிறது. ஆனால், ஆங்கிலம் உள்ளிட்ட மேற்கத்திய மொழிகளில் மொழியியல் தொடர்பான அறிவுக்கு வெறும் நானூறு ஆண்டு கால வரலாறு தான் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

  தமிழ் மொழியில் தூய தமிழ், தூய்மையற்ற தமிழ் என எதுவும் இல்லை. ஆனால், ‘தூய தமிழ்’ என்ற பதம் புழக்கத்தில் உள்ளது. இதற்கு என்ன காரணம்?

  பல நூற்றாண்டுகளுக்கு முன் பிறமொழிச் சொற்கள்  தமிழில் இடம்பெறத் தொடங்கின. அதனால், அச்சொற்களையும் பயன்படுத்தும் நிலைக்குத் தமிழர்கள் தள்ளப்பட்டனர். இதன் விளைவாக, பிறமொழிச் சொற்களுடன் கூடிய தமிழ் புழக்கத்துக்கு வந்தது.  ஆனால், இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கிய தனித்தமிழ் இயக்கங்கள், அயற்சொற்களைத் தனியாக இனம் பிரித்துக் காட்டத் தொடங்கின. இதையடுத்து,  பிறமொழிச்சொற்கள் இல்லாத தமிழுக்கு தூய தமிழ் என பெயர் ஏற்பட்டது. அயற்சொற்களின் வருகைக்கு முன்பு எப்போதும் தமிழ் மட்டுமே புழக்கத்தில் இருந்தது. தூய தமிழ், தூய்மையற்ற தமிழ் என எதுவும் அப்போது இல்லை. 

தமிழ் மொழியின் உயிர் மெய் எழுத்துக்களில் இடம்பெற்றுள்ள ‘ழ’ என்ற எழுத்து பிற எந்த மொழியிலும் பயன்பாட்டில் இல்லை. தமிழிலிருந்து மலையாளம் உள்ளிட்ட சில மொழிகளுக்குச் சென்றுள்ள இந்த எழுத்து, நாக்கை உள்நோக்கி மடித்து உச்சரிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. சிறப்பு ழகரம் என அழைக்கப்படும் ‘ழ’, மொழியியலில் தமிழரின் மிக நுண்ணிய அறிவைப் பறைசாற்றுவதாக உள்ளது. இந்த எழுத்து குறித்து அயல் நாட்டு மொழியியல் அறிஞர்களும் வியந்து பாராட்டியுள்ளனர். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே  ‘ழ’ பயன்படுத்தப்பட்டு வருவது, மொழியியல் சார்ந்த தமிழின் பெருமையே ஆகும்.

உலகில் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் கணிசமான எண்ணிக்கையிலான பொதுமக்களால் பேசப்பட்டுவருகின்றன. இவற்றில் எந்த ஒரு மொழியும் ஏராளமான சொற்களை பிறமொழிகளில் இருந்து தருவித்துக்கொண்டவையாகவே உள்ளன. ஆனால், தமிழ் மட்டுமே, எந்த ஒரு பிறமொழிச் சொல்லையும் தமிழ்ச் சொல்லாக ஏற்றுக்கொள்ளாத மொழியாகக் கருதப்படுகிறது. உதாரணமாக ‘Computer’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குக் கூட கணினி, கணிப்பொறி என சொற்களை தமிழர்கள் அறிமுகப்படுத்திய பின்னர் தான் பிறமொழிகளிலும் அதே போன்ற முயற்சிகள் எடுக்கப்பட்டன. இப்படி எந்த ஒரு பிறமொழிச் சொல்லும் ஊடுருவ அனுமதிக்காததாலேயே ‘கன்னித் தமிழ்’ என அனைவராலும் போற்றப்படும் மொழியாக தமிழ் விளங்குகிறது. ஆனால், ‘கன்னி’ என்ற சொல்கூட தமிழ்ச் சொல் அல்ல என்பதால், ‘தனித்தமிழ்’ என்ற ஒரு பதம் பிறந்தது. ஆம்… தமிழ் எப்போதுமே தனித்தமிழ் தான்..!

தமிழர்களின் சித்த மருத்துவம் உலகின் முன்னோடி மருத்துவ முறைகளில் ஒன்றாக விளங்குகிறது. எப்போது, யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது என்ற கேள்விக்கு ஆதாரப்பூர்வமாக எந்தப் பதிலும் கிடைக்காவிடினும், சித்தர்கள் தான் இம்மருத்துவமுறையை உருவாக்கி தமிழ் மொழி வழியாக வளர்த்தெடுத்தார்கள் என கருதப்படுகிறது. எனவே, இம்மருத்துவமுறையை பாரம்பரிய மருத்துவமுறையாக கருதலாம். இயற்கையாக கிடைக்கும் பசுந்தலைகள், பூ, மரப்பட்டைகள், உலோகங்கள், பலவித ரசாயனங்கள் என பலதரப்பட்ட பொருட்களைக் கொண்டு நோய்கள் மற்றும் காயங்களுக்கு மருத்துவ தீர்வு காணும் வழிகள் இம்முறையில் இடம்பெற்றுள்ளன. தமிழனின் பெருமைகளில் முதன்மையானவற்றில் சித்த மருத்துவமும் இடம்பெற்றுள்ளது.

ஔவையார் என்றால் யாரென்று தெரியாத தமிழன் இருக்க முடியாது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் அச்சு, எழுதுபொருட்கள், எளிதில் கிடைக்கும் நூல்கள் என தற்போதைய வசதிகள் எவையும் இல்லாத போதும்,  ‘கற்றது  கைமண் அளவு’ என அறிவின் விசாலத்தை உலகுணறச் செய்தவர்  ஔவையார் தான்.  ‘அறிவே ஆற்றல்’ என்பதை உணர்ந்து ஔவையார் வழியில் அறிவை வளர்க்க முயல்வோம்.

தமிழில் பெண் புலவர்கள் யார் எனக்கேட்டால், ஔவையார் என உடனே நாம் பதில் அளிக்க முடியும். ஆனால், சங்க காலம் தொட்டே ஏராளமான பெண் புலவர்கள் தமிழ் மொழிக்காகப் பணியாற்றியுள்ளனர். அவர்களில்  அஞ்சில் அஞ்சியார்,  ஒக்கூர் மாசாத்தியார், குமுழி ஞாழல் நப்பசையார், நக்கண்ணையார்,  பொதும்பில் புல்லளங்கண்ணியார் உள்ளிட்டோரும் அடங்குவர். உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்த வேளையில், நம் தாய் மொழிக்காக அரும்பணியாற்றிய பெண் புலவர்களை நினைவு கூர்வது நம் கடமை. அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மொழிகளில் தமிழைத்தவிர வேறு எவையும் தற்போது உலகின் எந்த இடத்திலும் பேசப்படுவதில்லை. சமற்கிருதம் மட்டும் ஒரே ஒரு கிராமத்தில் சிலநூறு பேரால் பேசப்பட்டுவருகிறது. ஆனால், உலகின் எந்த மொழிக்குடும்பத்தையும் சாராது, தனியாகச் செயல்பட்டுவரும் தமிழ் மொழி இன்றளவும் உலகம் முழுவதும் 12 கோடிக்கும் அதிகமான மக்களால் பேசப்பட்டுவருகிறது. இந்தியா மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும் ஆட்சி மொழியாகத் திகழ்கிறது  செம்மொழியான நமது தமிழ்.